15 வயது மாணவியை, 40 வயதானவருக்கு 2-வது திருமணம் செய்ய முயற்சி. மறுத்ததால் சூடுவைத்து சித்ரவதை செய்த தாய் மீது புகார்

அரக்கோணம் அருகே 15 வயது மாணவியை, 40 வயது நபருக்கு 2-வது திருமணம் செய்துவைக்க முயன்ற தாய் மீது போலீசில்புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் தன்னை சூடுவைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

Update: 2021-06-17 16:23 GMT
அரக்கோணம்

சூடுவைத்து சித்ரவதை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் 15 வயது மாணவியான தனது மகளுக்கு பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 40 வயதுடைய நபருக்கு இரண்டாவதாக திருமண செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு மகள் மேலும் படிக்க வேண்டும். திருமணம் வேண்டாம் என கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், மகள் என்றும் பார்க்காமல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் மகளின் இடது பக்க கன்னம், கழுத்து, தொடை பகுதியில் சூடு வைத்தும், கை மற்றும் முதுகில் அடித்தும் காயப்படுத்தி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் 2 நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் இருந்து வெளியேறி, தனது அத்தை வீட்டுக்கு சென்று இது குறித்து தெரிவித்துள்ளார்.
தாய்மீது போலீசில் புகார் 

பின்னர், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தொடர்ந்து மாணவி அவருடைய அத்தையுடன் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதில் தனது தாய் வாங்கிய ரூ.2 லட்சம் கடனை பனப்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் அடைப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த எனது தாய், அந்த நபருக்கு இரண்டாவதாக என்னை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். 

நான் மேற்கொண்டு படிக்க விரும்புவதாக தெரிவித்தும் என்னை துன்புறுத்தி கட்டாய திருமணம் செய்து வைக்க பார்க்கின்றார். தந்தை இல்லாத எனக்கு தாயிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்