கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அலைவதை தடுக்க முன்பதிவு செய்யப்படுகிறது.

Update: 2021-06-17 16:13 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 

மேலும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று வரை 2 லட்சத்து 76 ஆயிரத்து 615 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். 

அதேநேரம் கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் தொடக்கத்தில் ஒருவித தயக்கம் இருந்தது. தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வருகின்றனர்.

 இதனால் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் முகாம் நடத்தியும் தடுப்பூசி போடப்படுகிறது.
ஆனால், அரசு மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் மக்கள் அதிக அளவில் குவிந்து விடுகின்றனர். 

அதில் பலர் தடுப்பூசி போட முடியாமல் திரும்பி செல்லும் சம்பவம் தினமும் நடக்கிறது. இதனால் தேவையின்றி காத்திருந்து மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யப்படுகிறது.


மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்கின்றனர்.

மேலும் செய்திகள்