பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
மதுக்கடைகளை மூடக்கோரி பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடைகளை மூடக்கோரி பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கொரோனா கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு மட்டும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி கோபியில் நகர பா.ம.க. சார்பில் ஜெய் துர்க்கை நகரில் மதுக்கடைகள் திறப்பை கண்டித்து பா.ம.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கட்சியினர் கலந்து கொண்டார்கள்.
அதேபோல் கோபி நகர் ராமர் எக்ஸ்டன்ஷன் பகுதியில் மாநில அமைப்பு துணைத்தலைவர் ஷாஜகான் தலைமையிலும், பச்சைமலை அருகில் மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் யோகராஜ் தலைமையிலும் வாய்க்கால் ரோட்டில் கோபி நகரத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையிலும், கோபி நகரில் செயலாளர் மார்க்கெட் சதீஷ் தலைமையிலும், கோபி ஒன்றியம் அயலூர் அருகே உள்ள கோடங்கி தோட்டம் பகுதியில் ஒன்றிய செயலாளர் பூர்ண சாமி தலைமையிலும் மற்றும் குருமந்தூரில் நம்பியூர் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் நஞ்சை ஞானவேல், மாவட்ட துணைத்தலைவர் கஜேந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் கௌரிசங்கர், நகர பொறுப்பாளர்கள் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்
அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுக்கடைகள் திறப்பை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மாதேஷ், நகர துணைத் தலைவர்கள் எஸ்.கே.ஆறுமுகம், சேகர், உழவர் பேரியக்கம் நகர தலைவர் எஸ்.கே.நடராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பூபதி, சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் எண்ணமங்கலம், கள்ளிமடை புதுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்மாபேட்டை
இதேபோல் அம்மாபேட்டை கிழக்கு, தெற்கு உள்பட்ட பகுதிகளில் பா.ம.க. நிர்வாகிகள் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.வெங்கிடுசாமி தலைமையில் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி, கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.லோகநாதன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றியத்தில் செயலாளர் கோபால் தலைமையில் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள ஈரோடு மேற்கு மாவட்ட பா.ம.க. அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.சசிமோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுக்கடைகள் திறப்பை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி, கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் சத்தியமங்கலம் நகர செயலாளர் சரவணகுமார், நகர துணைத் தலைவர் ஆறுமுகம், சத்தியமங்கலம் வன்னியர் சங்க செயலாளர் மணிகண்டன், தலைவர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
பவானி
இதேபோல் பவானியை அடுத்துள்ள பருவாச்சி பகுதியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையிலும், ஒரிச்சேரிப் பகுதியில் மாநில அமைப்பு துணை செயலாளர் வக்கீல் செங்கோட்டையன் தலைமையிலும், ஜம்பை பேரூர் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் முருகானந்தம் தலைமையிலும், பா.ம.க.வினர் தங்கள் வீடுகளுக்கு முன் நின்று கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிகழ்ச்சியில் பவானி ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஜம்பை பேரூர் கழக செயலாளர் சம்பத், பருவாச்சி சீரங்கன், விவசாய முத்துச்சாமி, குருசாமி உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.