முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 2வது டோஸ் போட முடியாமல் தவிப்பு
கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் குறித்த காலக்கெடுவுக்குள் 2வது டோஸ் செலுத்திக் கொள்வதற்கு மாவட்ட, மாநில சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,ஜூன்.
கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் குறித்த காலக்கெடுவுக்குள் 2-வது டோஸ் செலுத்திக் கொள்வதற்கு மாவட்ட, மாநில சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி
விருதுநகர் மாவட்டத்தில் இது வரை 2 லட்சம் பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சமீப காலமாக தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் அவர்கள் அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது தவிர சேவை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு உடனடியாக குறுந்தகவல் அனுப்பும் நடவடிக்கை மற்றும் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. தடுப்பூசி போட்ட ஓரிரு நாட்களுக்கு பிறகு அவர்கள் வலியுறுத்தி கேட்ட பின்புதான் சான்று வழங்கப்படும் நிலையும் உள்ளது.
பாதிப்பு
இதனிடையே முதல் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 21 நாட்களில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2-வது டோஸை 4 முதல் 6 வாரங்களுக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விருதுநகர் மாவட்டத்திலேயே பலர் இதற்காக முன்பதிவு செய்தும் தடுப்பூசி மருந்து வராத நிலையில் அவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 2-வது டோஸ் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 6 வாரங்களில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 119 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட முடியாமல் போய்விட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்திலும் கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கோேவக்ஸின் தடுப்பூசி மருந்து சப்ளை இல்லாததால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 2-வது டோஸ் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் கருத்து
இது பற்றி மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே 6 வாரம் கடந்துவிட்ட நிலையில் பிரச்சினை ஏற்படாது என்றாலும் மேலும் தாமதிக்காமல் 2-வது டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தினர். எனவே தமிழக அரசு தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் மாநில சுகாதாரத்துறையிடம் மாவட்டத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி போட வேண்டியவர்களுக்கு மேலும் தாமதப்படுத்தாமல் தடுப்பூசி போட தேவையான மருந்தை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.