மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியாத்தத்தில் மதுவை கீழே ஊற்றி மதுபாட்டில்களை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததைக் கண்டித்தும், நிரந்தரமாக மதுக்கடைகளை மூடக்கோரியும் பா.ம.க. சார்பில் சத்துவாச்சாரி திரு.வி.க.நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணை பொதுச்செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம் முன்னிலை வகித்தார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி கையில் கருப்புக்கொடிகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
குடியாத்தம்
குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் ஜி.சுரேஷ்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் என்.குமார், மாவட்ட பொருளாளர் லாவண்யா, ஒன்றிய செயலாளர் எம்.கோபி, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் எஸ்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோல் சேங்குன்றம் பகுதியில் மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.பாலாஜி தலைமையிலும், கல்லப்பாடி மோட்டூர் பகுதியில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கே.செந்தில் குமார் தலைமையிலும், சீவூர் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் சி.மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் சுற்றுப்புற கிராம பகுதிகளிலும் பா.ம.க.வினர் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபாட்டில்களை உடைத்தனர்
சித்தூர் கேட் பகுதியில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பியபோது திடீரென மதுபாட்டில்களை திறந்து மதுவை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த மதுபாட்டில்களை தரையில் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி உள்ளிட்ட 20 பேர் மீது குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.