நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் விளக்கி கூறி உள்ளார்.

Update: 2021-06-17 13:03 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் கார் பருவத்தில் சுமார் 1,800 எக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு, வளர்ச்சி பருவத்தில் உள்ளது. இந்த பருவத்தில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்ட உடனே கண்காணித்து உடனடியாக பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். 

மாவட்டத்தின் சில பகுதிகளில் நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல் காணப்படுகிறது. தண்டு துளைப்பான் தாக்குதல் தங்கள் வயல்களில் உள்ளதா என்பதனை விவசாயிகள் கண்டறிந்து ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் வேண்டும்.

பாதிக்கப்பட்ட பயிர்களின் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக்கூட்டம் காணப்படும். தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும். தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்து விடுகிறது. இதுவே ‘குருத்து காய்தல்’ எனப்படுகிறது. 

நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக்கதிர்களும் காய்ந்து விடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே ‘வெண்கதிர்’ எனப்படுகிறது. குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும். பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் காணப்படும்.

முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மில்லி வீதம் இரண்டு முறை நாற்றாங்காலில் தெளிக்க வேண்டும். நாற்றுகளை நெருக்கமாக நடுதலை தவிர்க்க வேண்டும். நாற்று நடும்போது நாற்றின் நுனியை கிள்ளி விடுவதால் தண்டு துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது. 

வேப்பங்கொட்டைச்சாறு தெளிப்பதன் மூலமும் தண்டுத்துளைப்பானை கட்டுப்படுத்தலாம். அசார்டியாக்டின் 0.03 சதவீதம் எக்டேருக்கு 1,000 மில்லி அல்லது குளோரோடேரேனிலிபுருள் 18.5 எஸ்.சி. எக்டேருக்கு 50 மில்லி அல்லது புளுபென்டிமைட் 20 சதவீதம் டபிள்யூ.ஜி. எக்டேருக்கு 125 கிராம் ஆகிய ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் தண்டு துளைப்பான் நோயில் இருந்து பயிர்களை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்