நடைபயிற்சி மேற்கொண்டபடி கலெக்டர் மோகன் ஆய்வு

விழுப்புரம் நகரில் நடைபயிற்சி மேற்கொண்டபடி கலெக்டர் டி.மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா விதிகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.

Update: 2021-06-17 13:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட புதிய கலெக்டராக டி.மோகன் நேற்று  பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் கலெக்டர் டி.மோகன் இன்று காலை 7 மணியளவில்  விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் இருந்து நடைபயிற்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது அவர், விழுப்புரம் நகர சாலைகளில் உள்ள கடைகளில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என பார்வையிட்டார்.

3 பேருக்கு அபராதம்

விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை, பாகர்ஷா வீதி, எம்.ஜி. சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் முக கவசம் அணிந்தும், சமூக விலகலை பின்பற்றியும் வியாபாரம் நடைபெறுகிறதா? என்றும், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்றும் ஆய்வு செய்தார்.
அப்போது பாகர்ஷா வீதியில் உள்ள 3 காய்கறி கடைகளின் வியாபாரிகள் முக கவசம் அணியாமல் பொதுமக்களுக்கு காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்ததை பார்த்த கலெக்டர் டி.மோகன், உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி 3 கடைகளின் வியாபாரிகளுக்கும் தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அம்மா உணவகத்திற்கு சென்ற கலெக்டர் டி.மோகன், அங்கு பணியில் இருப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு தரமான உணவு சமைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா விதிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி உணவு வினியோகம் செய்ய வேண்டும் என்றும் பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அறிவுரை

அதன் பிறகு விழுப்புரம் நகராட்சி பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு வந்திருந்த கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கிறதா? என்று கள ஆய்வு பணியை சம்பிரதாயமாக மேற்கொள்ளாமல் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தினார். 
தொடர்ந்து, விழுப்புரம் பழைய பஸ் நிலையம், நடைபயிற்சியுடன் கூடிய அம்மா பூங்கா ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் திண்ணாயிரமூர்த்தி, ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்