குறுவை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற ஏதுவாக தரமான நெல் விதைகளை தேர்வு செய்ய வேண்டும்

குறுவை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற ஏதுவாக தரமான நெல் விதைகளை தேர்வு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு, விதைப்பரிசோதனை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தஞ்சை விதைப்பரிசோதனை அலுவலர் சிவ.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-06-17 12:23 GMT
தஞ்சாவூர்,

நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு தமிழக அரசால் குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால். டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக குறுவை சாகுபடிக்கு முக்கிய இடுபொருளான தரமான நெல் விதை ரகங்களை தேர்ந்தெடுத்து விதைப்பு செய்வது மிகவும் இன்றியமையாததாகும்.

குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் விதை ரகங்களான கோ-51, ஏடிடி-53, ஏடிடி-43, ஏடிடி-45, ஏடிடி-36, ஏடிடி-37, ஏஎஸ்டி-16, டிபிஎஸ்-5 ஆகிய ரகங்களில் பகுதிக்கு ஏற்றவாறு தேர்வு செய்து விதையின் தரம் அறிந்து விதைப்பது அவசியமாகும்.

எனவே விதை சேமித்து வைத்திருக்கும் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தாங்கள் இருப்பு வைத்திருக்கும் விதைக்குவியல்களில் இருந்து 100 கிராம் வீதம் விதை மாதிரி எடுத்து தங்கள் முழு முகவரியுடன் விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.30 வீதம் பகுப்பாய்வு கட்டணமாக தஞ்சை மாரியம்மன் கோவில் ரோடு, காட்டுத்தோட்டத்தில் அமைந்துள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில செலுத்தி பகுப்பாய்வு செய்து விதை ரகங்களின் முளைப்புத்திறனை அறிந்து கொள்ளலாம்.

முளைப்புத்திறன் அறிந்து விதைப்பு செய்வதால் ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட விதையளவை மட்டும் பயன்படுத்துவதுடன், விதைக்கான செலவினத்தை குறைக்க முடியும். மேலும் தரமான விதைகளை பயன்படுத்துவதால் கூடுதல் மகசூல் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்