தண்ணீர் 10 நாட்களில் கடைமடையை சென்றடையும் - அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. எனவே தண்ணீர் 10 நாட்களில் கடைமடையை சென்றடையும் என்று அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறினர்.
தஞ்சாவூர்,
கல்லணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 3.10 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்படும். மேலும் இந்த ஆண்டு ஆழ்துளை கிணறுகள் மூலம் பயிரிடப்பட்டுள்ள 2.42 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்களும் பயனடையும்.
அனைத்து ஆறுகளிலும் தலா 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும்.
இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூர்வாரும் பணிகள் தற்போது 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. தண்ணீர் அந்த பகுதிக்குள் செல்வதற்குள் மீதமுள்ள தூர்வாரும் பணிகள் முடிந்து விடும்.
குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரத்து 500 கோடி பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரம் ஆகியவை போதியளவு கையிருப்பு உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெறுவது கடந்த ஆட்சியில் செய்த தவறு. இது குறித்து உணவு துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சொல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.