ஈரோட்டில் இன்று 10 இடங்களில் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோட்டில் இன்று 10 இடங்களில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
ஈரோட்டில் இன்று 10 இடங்களில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, வட்டார அளவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு
தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் நோய் தொற்று குறித்தும், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 514 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 10 இடங்களில் நாளை (அதாவது இன்று) கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அந்த முகாம்களில் தலா 200 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், தலா 100 கோவேக்சின் தடுப்பூசிகளும் என மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து வந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதிக்தயாளர், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், சப்-கலெக்டர் (பயிற்சி) ஏக்கம்ஜேசிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி (பொது), ஈஸ்வரன் (கணக்குகள்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.