சேலம் மாவட்டத்தில் 122 மையங்களில் இன்று தடுப்பூசி போட ஏற்பாடு- கலெக்டர் தகவல்

சேலம் மாவட்டத்தில் 122 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

Update: 2021-06-16 22:03 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 122 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2 வார்டுக்கு ஒரு மையம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள தற்போது முன் வந்துள்ளனர். இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணியை மேலும் செம்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
சேலம் மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே 16 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தன. இனிமேல் 2 வார்டுகளுக்கு ஒரு மையம் என்ற அளவில் 30 மையங்களில் தடுப்பூசி போடப்படும். இதைத்தவிர ஊரக பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 92 ஆரம்ப சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போடப்படும். மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மொத்தம் 122 மையங்களில் தடுப்பூசி போடப்படும்.
31,520 தடுப்பூசி ஒதுக்கீடு
மாவட்டத்தில் இன்று ஊரக பகுதிகளில் உள்ள 92 மையங்களில் 4,820 கோவேக்சினும், 16 ஆயிரத்து 900 கோவிஷீல்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி பகுதிகளில் 1,200 கோவேக்சினும், 6 ஆயிரம் கோவிஷீல்டும் போடப்படுகின்றன. இதுதவிர நிறுவனங்களுக்காக 2,600 கோவிஷீல்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மாவட்டம் முழுவதும் 122 மையங்களில் 31 ஆயிரத்து 520 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் வெவ்வேறு பணியாளர் மூலம் போடப்படும். பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, அல்லது வேறு அடையாள ஆவணங்களுடன் நேரில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தவறாமல் தங்களது செல்போன் எண்ணை அங்கு தெரிவிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் அன்றைய தினம் போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கை விவரங்களை அறிவிப்பு பலகைகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த பகுதியில் எந்தெந்த நாட்களில் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரத்தினை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை போடப்படும்.
பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அங்கு பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து செல்வதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும். மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்காக 1,270 கோவேக்சினும், 2,200 கோவிஷீல்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்