வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான குளங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு

குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான குளங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-16 21:46 GMT
நாகர்கோவில்:
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான குளங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குளச்சல் அருகே சிங்காரவேலர் காலனி பகுதியில் ஏ.வி.எம். கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் ரீத்தாபுரம் பகுதியில் காக்கைகுளம், பெரிய குளம், தாமரைக்குளம் ஆகிய குளங்கள் நிறைந்து அருகாமையிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 28-ந் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மீண்டும் ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட காக்கைகுளம், பெரியகுளம், தாமரைக்குளம் ஆகிய குளங்களை நேரில் பார்வையிட்டு, வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததற்கான காரணங்களை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தீர்வு காணப்படும்
மேலும் கடலுக்கு தண்ணீர் செல்லும் ஓடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்வதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்யும்படி பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அந்த பகுதிகளிலுள்ள பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வில், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் வசந்தி, குழித்துறை பட்டணங்கால் உதவி செயற்பொறியாளர் கிங்ஸிலி, கருங்கல் பட்டணங்கால் உதவி பொறியாளர் சுதர், அருட்பணியாளர்கள் செல்வம், ராஜ், ரீத்தாபுரம் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், ரீத்தாபுரம் வருவாய் ஆய்வாளர் ரோஸ்லேன்ட், கிராம நிர்வாக அலுவலர் சோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்