களக்காடு அருகே காதல் திருமணம் செய்த நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
களக்காடு அருகே, காதல் திருமணம் செய்த நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே, காதல் திருமணம் செய்த நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
காதல் திருமணம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்தை சேர்ந்த வைகுண்டராஜன் மகள் தங்கசாந்தினி (வயது 21). இவர் களக்காட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்தார்.
அப்போது அவருக்கும், களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளத்தை சேர்ந்த நாராயணன் மகன் கட்டிட தொழிலாளி ரெனிஸ் முத்துக்குமார் (25) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கசாந்தினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா ஸ்டெபலா தெரஸ், களக்காடு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தங்கசாந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மிரட்டல்
இதற்கிடையே, தங்கசாந்தினியின் தந்தை களக்காடு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
தங்கசாந்தினி திருமணத்தின்போது 11 பவுன் தங்க நகைகள் சீதனமாக வழங்கினோம். குழந்தை இல்லாததால் ரெனிஸ் முத்துக்குமார் வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக எனது மகளை அடிக்கடி மிரட்டி வந்தார். இதனால் மனமுடைந்து வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்ட அவளுக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம்.
நேற்று முன்தினம் மதியம் தங்கசாந்தினி எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு, தன்னை கணவர் ரெனிஸ் முத்துக்குமாரும், அவரது தம்பி ரஞ்சித்குமாரும் சேர்ந்து கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதார்.
சாவில் சந்தேகம்
எனவே, எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அவரது கணவர் ரெனிஸ் முத்துக்குமார், அவரது தம்பி ரஞ்சித்குமாரின் கொடுமையே அவளது சாவுக்கு காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.