நெல்லை அருகே இருதரப்பினர் பயங்கர மோதல்: மாணவர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; வீடுகள் மீது கல்வீச்சு
நெல்லை அருகே இருதரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் மாணவர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதுடன் வைக்கோலுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை அருகே இருதரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் மாணவர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதுடன் வைக்கோலுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐ.டி.ஐ. மாணவர்
நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் முல்லை நகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் பாலமுகேஷ் (வயது 19). இவர் பேட்டை அரசு ஐ.டி.ஐ. யில் படித்து வருகிறார். நேற்று மாலை பாலமுகேஷ் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள பாளையங்கால்வாய்க்கு குளிக்க சென்றார்.
அப்போது, அங்கு ஒரு கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தது. அந்த கும்பல் திடீரென்று அரிவாளால் பாலமுகேஷை வெட்டியது. இதை தடுக்க வந்த அவரது நண்பர்களையும் கட்டை, கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மோட்டார் சைக்கிள்களில் அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது.
பலத்த காயம் அடைந்த முகேஷை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீடுகள் மீது கல்வீச்சு
இதுகுறித்து பாலமுகேஷ் ஊரில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் அங்கு வசித்து வரும் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களின் பகுதியில் புகுந்தனர். அங்கு இருந்த வீடுகள் மீது கற்களை வீசி தாக்கியதாகவும், ஆட்டோவை தலைக்குப்புற கவிழ்த்து போட்டு சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்கு இருந்த வைக்கோல் படப்புக்கும் தீவைக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் முல்லை நகரில் மெயின் ரோட்டில் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகர துணை கமிஷனர் ராஜராஜன் மற்றும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சாலை மறியல்
அப்போது, பாலமுகேஷை வெட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, எங்கள் ஊருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, வீடுகள் மீது கல்வீசி தாக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நெல்லை-அம்பை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், வீடுகள் மீது கல்வீசி சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மேலும் 2 பேருக்கு வெட்டு
இந்த சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் போதே நெல்லை அருகே பிராஞ்சேரி சுப்பிரமணியபுரம் அகதிகள் முகாம் தெருவில் நேற்று இரவில் 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம கும்பல் புகுந்தது. அங்கு இருந்த சின்னத்துரை (55), பெருமாள் (65) ஆகியோரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் பாபநாசம்-நெல்லை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.