மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு கண்புரை நோய் பாதிப்பா?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தாக வந்த தகவலையடுத்து சென்னை கால்நடை டாக்டர்கள் நேரில் வந்து சிகிச்சை அளித்தனர்
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தாக வந்த தகவலையடுத்து சென்னை கால்நடை டாக்டர்கள் நேரில் வந்து சிகிச்சை அளித்தனர்.
கண் நோயால் பாதிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி வீதி உலாவின் போது யானை, ஒட்டகம், டங்கா மாடு போன்றவை சுவாமிக்கு முன்னே வருவது வழக்கம். எனவே பல கோவில்களில் யானை, ஒட்டகம் போன்ற விலங்குகளை வளர்த்து வருவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்ற யானை கடந்த 2000-ம் ஆண்டு வாங்கப்பட்டது.
அதற்கு தற்போது 25 வயது ஆகிறது. கடந்த ஆண்டு மே மாதம் யானையின் இடது கண்ணில் வெள்ளையாக பூ படுதல்(கண் புரை) போன்று பார்வை கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து மதுரை கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் சரவணன் தலைமையில் டாக்டர்கள் நேரில் வந்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அரவிந்த் கண்மருத்துவமனை டாக்டர்கள் யானை கண்ணை பரிசோதனை செய்து மருந்து கொடுத்து வந்தனர்.
சென்னை டாக்டர்கள் நேரில் வந்து சிகிச்சை
இந்தநிலையில் இடது கண்ணில் வந்தது போன்று வலது கண்ணில் லேசாக பார்வை கோளாறு ஏற்பட்டதாக யானை பாகன் கோவில் இணை கமிஷனரிடம் தெரிவித்தர்.
அதை தொடர்ந்து கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் யானையின் கண்ணை பரிசோதனை செய்து பார்க்குமாறு சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி சிறப்பு டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
அதன் பேரில் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி கண் சிறப்பு பிரிவு டாக்டர் ரமணி தலைமையில் டாக்டர்கள் அடங்கிய குழு நேற்று மதுரை வந்தது. அவர்கள் நவீன கருவிகள் மூலம் யானை பார்வதியின் கண்களில் பரிசோதனை செய்து பார்த்தனர். மேலும் ரத்த மாதிரி உள்ளிட்ட பல்வேறு மாதிரிகளை யானையிடமிருந்து சேகரித்து உள்ளனர்.
அதன்பின்னர் டாக்டர்கள் கூறும்போது, தற்போது வரை யானையின் கண்களில் பார்வையில் எவ்வித பாதிப்பும் இல்லை, பரிசோதனையின் முடிவில் யானைக்கு எவ்வித பாதிப்பு உள்ளது பற்றி தெரியவரும் என்றனர். மேலும் கண்புரை நோய்க்கு தேவையான மருந்து, மாத்திரைகள் யானைக்கு வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டது என்றனர்.