தண்டவாளத்தில் காரை நிறுத்தி ரெயில்வே பெண் ஊழியரிடம் தகராறு செய்தவர் கைது
தண்டவாளத்தில் காரை நிறுத்தி ரெயில்வே பெண் ஊழியரிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
தண்டவாளத்தில் காரை நிறுத்தி ரெயில்வே பெண் ஊழியரிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில்வே கேட் கீப்பர்
திருச்சி கே.கே.நகர் மங்கம்மாள்சாலை லட்சுமி நகரை சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 24). இவர் திருச்சி-புதுக்கோட்டை ரெயில்வே மார்க்கத்தில் கே.சாத்தனூர் ரெயில்வே கேட் கீப்பராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் பகல் கீர்த்திகா பணியில் இருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வாகனத்தை ரெயில்வே தண்டவாளத்தில் நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
இதைக்கண்ட கீர்த்திகா அவரிடம் சென்று இரு சக்கர வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கீர்த்திகா திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
கைது
சிறிது நேரம் கழித்து மீண்டும் காருடன் அங்கு வந்த அவர், காரை தண்டவாளத்தில் நிறுத்திவிட்டு கீர்த்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீர்த்திகா கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீசார் அந்தநபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கே.சாத்தனூரை சேர்ந்த சரவணன் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.