நடிகர் நடிகை பெயரில் வலம் வந்து கஞ்சா விற்ற காதல் ஜோடி கைது
நடிகர்-நடிகை பெயரில் வலம் வந்து கஞ்சா விற்ற காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.
கோவை
நடிகர்-நடிகை பெயரில் வலம் வந்து கஞ்சா விற்ற காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் ஜோடி
கோவை மாநகர கிழக்குப்பகுதி போலீஸ் உதவி கமிஷனர் அருண் மேற்பார்வையில், பீளமேடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார், நேரு நகர் வீரியம்பாளையம் ரோட்டில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய இளம்பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (வயது 21), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (21) என்பதும், 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதும் தெரிய வந்தது.
2 பேர் கைது
தொடர்ந்து போலீசார் 2 பேரிடம் விசாரணை செய்தபோது, கஞ்சா விற்று வருவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதற்குள் 2¼ கிலோ கஞ்சா இருந்தது.
அவர்கள் 2 பேரும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அத்துடன் அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
2 வருடமாக காதல்
வினோதினி கோவையில் தங்கி இருந்து நர்சிங் படித்து உள்ளார். சூர்யபிரகாஷ் பட்டப்படிப்பு படித்து வந்தார். அப்போது முகநூல் மூலம் 2 பேருக்கும் தொடர்பு ஏற்பட்டு, நட்பாக பழகினார்கள்.
பின்னர் அது காதலாக மாறியது. 2 வருடங்களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்து உள்ளனர்.
விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட 2 பேரும், தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து ஒன்றாக தங்கி இருந்தனர்.
கல்லூரியில் படிக்கும்போதே சூர்யபிரகாசுக்கு கஞ்சா விற்கும் பழக்கம் இருந்து உள்ளது.
கஞ்சா விற்றனர்
இந்த நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் கல்லூரி திறக்கவில்லை. எனவே கல்லூரி படிப்பை அவர் பாதியில் நிறுத்தி உள்ளார். பல இடங்களில் வேலை கேட்டும் கிடைக்க வில்லை.
ஏற்கனவே தனக்கு கஞ்சா விற்கும் பழக்கம் உள்ளதால், தனது காதலியுடன் சேர்ந்து கஞ்சா விற்க முடிவு செய்தார்.
இதையடுத்து தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து கஞ்சாவை வாங்கி, கோவையில் அறை எடுத்து தங்கி உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று உள்ளனர்.
ஆடம்பரமான வாழ்க்கை
அதில் நல்ல வருமானம் கிடைத்து உள்ளது. அதை வைத்து ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்தனர். கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா விற்பனை நல்ல முறையில் சென்றது.
இதனால் தொடர்ந்து அவற்றை விற்க முடிவு செய்து கல்லூரி மாணவர்கள் பலரை தங்களின் தொடர்புக்குள் வைத்துக்கொண்டனர்.
மேலும் போலீசார் தங்களை பிடித்து விட்டால் எளிதில் தப்பிப்பதற்காக சூர்யபிரகாஷ் தனது பெயரை நடிகர் சூர்யா என்றும், வினோதினி நடிகை தமன்னா என்றும் பெயரை மாற்றிக்கொண்டு கோவையில் வலம் வந்து உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.