நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் என 84 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களும் மூடப்பட்டதால் தடுப்பூசி போடவில்லை.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு 1000 கோவேக்சின் மற்றும் 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. இவை அனைத்து மையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. நேற்று காலை முதலே அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
நீண்ட வரிசையில்...
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் தடுப்பூசி போடுவதற்கு 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு மையத்திலும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட வந்தவர்களுக்கு மற்றொரு மையத்திலும் தடுப்பூசி போடப்பட்டது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் சென்றனர்.
இதில் கோவேக்சின் தடுப்பூசி உடனே காலியாகிவிட்டது. இதனால் அந்த தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். புதிதாக தடுப்பூசி போட வந்தவர்கள் கோவேக்சினுக்கு பதிலாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதேபோல் நெல்லை மாநகர பகுதியில் 20 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 3 ஆயிரத்து 750 தடுப்பூசிகள் மாநகர பகுதியில் மட்டும் போடப்பட்டது. அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 100 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வைத்து தடுப்பூசி போடப்பட்டது. பேட்டை தொழிற்பேட்டையில் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது. இதனால் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.