மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நாளை போராட்டம்-இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் பேட்டி
மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல்:
நாடு முழுவதும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தகோரி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நாளை போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவின் முதல் அலை மற்றும் 2-ம் அலையில், இந்தியாவில் 1,400 டாக்டர்கள் உயிரிழந்து உள்ளனர். கொேரானா பரவும் ஆபத்தான நிலையிலும் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது வட மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவித்தும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் இந்தியா முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து போராட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது சங்கத்தின் தேசிய துணை தலைவர் ராஜா, மாவட்ட தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.