நாமக்கல்லில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு ‘சீல்’-வெளியே சுற்றித்திரிந்த 280 பேருக்கு கொரோனா பரிசோதனை
நாமக்கல் நகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதேபோல் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றிய 280 பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நாமக்கல்:
ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல், சேலம் உள்பட 11 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு சில தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளன.
கடைகளை பொறுத்த வரையில் மளிகை, காய்கறி, இறைச்சி போன்ற கடைகள் திறக்க மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டபோதும், வணிகர் சங்கங்கத்தினர் மதியம் 1 மணிக்கே கடைகளை மூடி விடுகின்றனர். இந்தநிலையில் நாமக்கல் நகரில் அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டு இருப்பதாக உதவி கலெக்டர் கோட்டைக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
3 கடைகளுக்கு ‘சீல்’
அவரது உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல்லில் உள்ள சேலம் சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி செல்போன் கடை மற்றும் பேக்கரி கடை திறந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 கடைகளையும் பூட்டி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல் நாமக்கல் பஸ் நிலையம் அருகே திறந்திருந்த செல்போன் கடை ஒன்றுக்கும் சீல் வைக்கப்பட்டது.
கொரோனா பரிசோதனை
இதற்கிடையே நாமக்கல் நகரில் தேவையின்றி ஏராளமான நபர்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் நேற்று சேலம் சாலை மற்றும் பரமத்தி சாலை பகுதிகளில் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் நாமக்கல் நகராட்சி பகுதியில் 280 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.