பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளை இணைக்க ஆய்வு

பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளை இணைக்க ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு இருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2021-06-16 17:48 GMT
நாகர்கோவில்:
பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளை இணைக்க ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு இருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறினார்.
தண்ணீர் திறப்பு
குமரி மாவட்ட பொதுப்பணித்துறையின் (நீர் ஆதார அமைப்பு) கீழ் கோதையாறு பாசனத் திட்ட அணையில் இருந்து ராதாபுரம் கால்வாய் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நிலப்பாறை திருமூலநகரில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். 
இதில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு ஷட்டரை இயக்கி பாசனத்துக்காக தண்ணீரை திறந்து விட்டார். 
நேரடி பாசனத்துக்கு வழிவகை
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அதிகமான மழை பெய்ததின் காரணமாக ஏராளமான குளங்கள் முழுமையாக நிரம்பின. கடந்த காலங்களில் 20 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ராதாபுரம் பகுதிகளின் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பேச்சிப்பாறை அணையிலிருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு ஏரி, குளங்கள் நிரம்பி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. 
வறண்ட ராதாபுரம் பகுதியில் குளங்களை நிரப்புவதற்காகவும், சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பகுதிகள் நேரடியாக பாசன வசதி பெறுவதற்கு வழிவகை இருக்கிறது. ஆனால் போதுமான அளவு நேரடி பாசன வசதிகள் இல்லை. அப்பகுதியை சுற்றியுள்ள 52 குளங்களில் தண்ணீர் நிறைந்தால் மட்டுமே அந்த பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ள ஏதுவாக இருப்பதோடு பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும்.
150 கனஅடி
இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்றதன் அடிப்படையில் குமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் பகுதிகளை சுற்றியுள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட லெவிஞ்சிபுரம், கருங்குளம், பழவூர், அடங்கார்குளம், அழகனேரி, தனக்கர்குளம், கூடங்குளம், பரமேசுவரபுரம் மற்றும் ராதாபுரம் கிராமங்களை சேர்ந்த 17 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பில் நேரடி பாசனம் வாயிலாக சுமார் 15,987 ஏக்கர் பாசனப்பரப்பும், 52 குளங்கள் மூலம் 1,013 ஏக்கர் பாசனப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ள வழிவகை செய்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பேச்சிப்பாறை அணையிலிருந்து தோவாளை தாலுகா வழியாக ராதாபுரம் கால்வாய் வரை 75 கி.மீ. தூரத்திலுள்ள உடைப்புகளையெல்லாம் சரிசெய்ய ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பழுதடைந்த கால்வாய்கள் சரிசெய்யப்பட்டது.
ஆய்வு
கருணாநிதியின் நல்வழியில் செயல்படும் மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை மற்றும் மணிமுத்தாறு அணையை இணைக்கின்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு) அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எனது தலைமையில் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
பாபநாசம் அணையை பொறுத்தமட்டில் கடல் மட்டத்திலிருந்து 264 அடி உயரத்திலும், மணிமுத்தாறு அணை கடல்மட்டத்திலிருந்து 109 அடி உயரத்திலும் இருக்கிறது. இரு அணைகளுக்குமிடையே சுமார் 7 கி.மீ. தூரம் இருப்பதால், அணைகளை இணைக்கும் பணிகள் குறித்து, அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்ற பின், இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் நிறைவடைந்தால் கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து வறண்ட பகுதியான நாங்குநேரி, ராதாபுரம், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு, ஆலந்துறையாறு பகுதிகளுக்கு இந்த தண்ணீரை கொண்டு செல்ல வழிவகை செய்யும்.
தடுப்பணை
மேலும் குமரி மாவட்டத்தில் பிரதான அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1 மற்றும் சிற்றார்-2 அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கடலில் கலப்பதை தவிர்க்கும் வகையில் அதிகம் தண்ணீர் வரக்கூடிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஞான திரவியம் எம்.பி.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, ராதாபுரம் உதவி பொறியாளர் சுபாஷ், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்