சீசன் முடிந்தும் செல்ல மனமில்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டு பறவைகள்
திருப்பத்தூர் அருகே கண்மாய் நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதால் இனப்பெருக்கத்திற்காக வந்த வெளிநாட்டு பறவைகள் சீசன் முடிந்தும் அங்கிருந்து செல்லாமல் தங்கியிருப்பது சுற்றுலா பயணிகள் மற்றும் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்,ஜூன்.
திருப்பத்தூர் அருகே கண்மாய் நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதால் இனப்பெருக்கத்திற்காக வந்த வெளிநாட்டு பறவைகள் சீசன் முடிந்தும் அங்கிருந்து செல்லாமல் தங்கியிருப்பது சுற்றுலா பயணிகள் மற்றும் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு பறவைகள்
திருப்பத்தூர்- மதுரை சாலையில் வேட்டங்குடி உள்ளது. இங்குள்ள கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரும். அந்த பறவைகள் இங்கு தங்கியிருந்து குஞ்சுகள் பொரித்து குஞ்சுகளை அழைத்துக் கொண்டு மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு சென்று விடும். இதனால் இந்த பகுதி பறவைகள் சரணாலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும் வனத்துறை சார்பில் இங்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இங்கு தனியாக அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலங்கை, பர்மா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பறவைகள் வருவது வழக்கம். பொதுவாக, இந்த பகுதியில் பெய்யும் பருவ மழையை பொறுத்து தான் இந்த பறவைகள் வந்து செல்லும். கடந்த காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வில்லை.
தேங்கும் குறைந்த அளவு தண்ணீரும் 2 அல்லது 3 மாதங்களில் வற்றிவிடும். அந்த காலக்கட்டத்தில் மட்டும் இந்த பறவைகள் இங்கு தங்கியிருக்கும் நிலை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த கண்மாய் தூர்வாரப்பட்டதால் போதுமான அளவு இந்த கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது.
2-வது கட்ட இனப்பெருக்கம்
கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் பெய்த மழையாலும், தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும் கண்மாயில் தண்ணீர் நன்றாக தேங்கியுள்ளது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக இங்கு வந்த சாம்பல் நிற நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, கரண்டி நத்தை, முக்குளிப்பான் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து பாதுகாத்து வருகிறது.
தற்போது அந்த குஞ்சுகள் பறக்கும் நிலைக்கு வந்துள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் சீசன் நிறைவு பெற்ற பின்னரும் கூட இங்கு தண்ணீர் வற்றாமல் தேங்கியுள்ளதால் இந்த பறவைகள் இங்கிருந்து செல்லாமல் இங்கேயே தங்கியுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உணவாக மீன்கள்
தற்போது 200-க்கும் மேற்பட்ட பறவைகள் தங்களது குஞ்சுகளுடன் இங்கு தங்கியுள்ளன.
சீசன் முடிந்த நிலையிலும் 2-வது கட்ட இனப்பெருக்கத்திற்காக தங்கியிருக்கும் இந்த வெளிநாட்டு பறவைகளை திருப்பத்தூர் சரக வனத்துறை அலுவலர் மதிவாணன் தலைமையில் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த பறவைகளுக்கு உணவாக பயன்படும் மீன்களை ஏற்கனவே வாங்கி இந்த கண்மாயில் இனப்பெருக்கத்திற்காக விட்டுள்ளதால் தற்போது மீன்களை உணவாக இந்த பறவைகள் உட்கொண்டு வருகிறது.
மேலும் அவ்வப்போது பறவைகளை தொந்தரவு செய்யும் வகையில் குரங்குகள் கூட்டம் ஏதும் வருகிறதா என்பதையும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.