கோமுகி அணை பகுதியில் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்
கோமுகி அணை பகுதியில் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்
கச்சிராயப்பாளையம்
11,000 ஏக்கர் நிலம்
கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த கோமுகி அணைக்கு கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஆறுகளின் வழியாக வரும். அவ்வாறு வரும் தண்ணீர் 44 அடி வரை சேமித்து வைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்துக்காக திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 11,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக கோமுகி அணையில் இருந்து கடந்த ஆக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.
நெல் சாகுபடி
இதை பயன்படுத்தி கல்வராயன் மலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். மேலும் இடை இடையே லேசானது முதல் மிதமான மழையும் பெய்ததால் பயிர் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் டி.ஏ.பி. வகை நெற்பயிர் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டன. தற்போது பயிர் நன்கு வளர்ச்சி அடைந்ததை அடுத்து அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக வடக்கநந்தல், கச்சிராயப்பாளையம், பரிகம், மண்மலை, கரடிசித்தூர் உள்ளிட்ட கோமுகி அணை பாசன அணைக்கட்டு வாய்க்கால் பகுதி விவசாயிகள் நெல்அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.