பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற மனு
பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.;
பரமக்குடி,
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக பரமக்குடி வந்தார். அப்போது அமைச்சர் நேருவிடம் முருகேசன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அதில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பரமக்குடி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு முன் நிறைவேற்றி தரவேண்டும். பரமக்குடி வைகை ஆற்றின் இருபுறமும் உள்ள புறவழிச்சாலையில் மின் விளக்குகள் அமைத்து விபத்துகள் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் நகராட்சி பணியாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். போகலூர் ஒன்றிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே மஞ்சக்கொல்லை வைகை ஆற்றில் போர்வெல் அமைத்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி கட்டி அதன் மூலம் அந்தபகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.