தமிழக மீனவர்களின் எஞ்சியுள்ள உரிமைகளும் பறிபோகும்

இலங்கை அரசின் நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் எஞ்சியுள்ள உரிமைகளும் பறிபோகும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.

Update: 2021-06-16 16:47 GMT
ராமநாதபுரம், 
இலங்கை அரசின் நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் எஞ்சியுள்ள உரிமைகளும் பறிபோகும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.
பேட்டி
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-  மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தமிகத்திலேயே தடுப்பூசி உற்பத்திக்கான அனுமதி, நீட் தேர்வு ரத்து, தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பேச உள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நரிப்பையூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை நிறைவேற்றி கிராமப்புற மக்களின் தாகம் தீர்த்தார். அந்த திட்டம் தொடர்ந்து பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அந்த திட்டத்தினை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. 
சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற, அச்சட்டத்தை அமல்படுத்த விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதை மத்திய அரசு செய்யவில்லை.
பாராட்டு
மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ.  சட்டத்தை அமல்படுத்த விதிகள் உருவாக்கப்படாததால், இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. ஏனெனில் சி.ஏ.ஏ.  சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்குகளை கிடப்பில் போட மத்திய அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. கடந்த 2006 - 2011 வரை நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி போல சிறந்த ஆட்சி இதுவரை தமிழகத்தில் வரவில்லை. அதேபோல தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1½ மாதங்களில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயரும். அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து உள்ளது.இப்போது இலங்கை அரசின் நடவடிக்கையால், ராமேசுவரம் பகுதி மீனவர்களின் எஞ்சியுள்ள உரிமைகளும் பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனை தடுக்க பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசை முகமது, மாவட்ட துணை தலைவர் சாதுல்லாகான், மாவட்ட துணை செயலாளர் யாக்கூப், நகர் செயலாளர் கதியத்துல்லா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்