வரைபடம் போட்டு வழித்தடம் தேடும் மதுப்பிரியர்கள்
வரைபடம் போட்டு வழித்தடம் தேடும் மதுப்பிரியர்கள்
போடிப்பட்டி
டாஸ்மாக் திறக்கப்பட்ட மாவட்டங்களை சென்றடைவதற்கு வரைபடம் தயாரித்து வழித்தடம் தேடும் மதுப்பிரியர்கள், மாவட்ட எல்லைகளைத் தாண்ட குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
பதுக்கல் விற்பனை
கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் பல பகுதிகளில் பதுக்கி வைத்து ரூ.230 மதிப்புள்ள குவாட்டர் மது பாட்டிலை ரூ.1000 வரை விற்பனை செய்துள்ளார்கள். மேலும் கலப்பட மது, சாராயம் என்று பல கோணங்களில் மது அடிமைகளைக் குறி வைத்து ஒரு கூட்டம் இயங்கியது.
மதுவைத்தேடி பல ஊர்களுக்கு வெறி பிடித்தவர்களைப்போல சிலர் சுற்றுவதைக்காண முடிந்தது. அவ்வாறு சுற்றுபவர்களிடம் டீத்தூள், புளியங்கொட்டைத்தோல் போன்றவற்றிலிருந்து சாறு பிழிந்து மது பாட்டில்களில் அடைத்து மது என்று கூறி விற்பனை செய்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
இத்தனை இன்னல்களையும் தாண்டி மதுப்பிரியர்களின் மனம் குளிரச்செய்தது. செய்தி ஜூன் 14-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற செய்தியாகும். ஆனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் தொற்று பரவல் குறையாததால் டாஸ்மாக் திறக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு இந்த மாவட்ட மதுப்பிரியர்களின் களின் தலையில் இடியாக இறங்கியது.
வரைபடம் வெளியிட்டனர்
ஆனாலும் மனம் தளராத மதுப்பிரியர்கள் அருகாமை மாவட்டங்களில் எங்கெங்கு மதுக்கடைகள் உள்ளன. அவற்றுக்கு எப்படி செல்வது என்பன உள்ளிட்ட தகவல்களைச் சேகரிக்கத்தொடங்கினர். முதல்கட்டமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் அருகாமை மாவட்டங்கள் குறித்து தயாரித்த வரைபடம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட மதுப்பிரியர்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் படையெடுத்து சென்று மதுகளை வாங்கு கின்றனர். அவர்கள் எல்லைதாண்டி செல்ல குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
கரூர் மாவட்ட மதுப்பிரியர்கள் திண்டுக்கல், மதுரை, திருச்சி என்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு தளர்வுகள் அறிவிக்கப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த மதுப்பிரியர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் தான் வழியே இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆனால் சற்றும் மனம் தளராத மதுப்பிரியர்கள் பலரும் பல சோதனைச்சாவடிகள், பல நூறு கிலோ மீட்டர்களைத் தாண்டி சென்று மது வாங்கி வருகின்றனர். இதற்கு மேட்டுப்பாளையத்திலிருந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையான சாமிநாதபுரத்தில் வந்து மது வாங்கிச்சென்ற இளைஞர் சாட்சியாகும்.
கூடுதல் விலைக்கு விற்பனை
இதுதவிர ஒவ்வொரு மாவட்ட எல்லைகளை கடப்பதற்கும் குறுக்கு வழி குறித்து விவரங்கள் சேகரித்து அதற்கொரு ஸ்கெட்ச் போட்டது தனிக்கதை. பொதுவாக சமூக விரோதிகளும், கடத்தல்காரர்களும் மட்டுமே இதுபோன்ற குறுக்கு வழிகளைப்பயன்படுத்துவதுண்டு. தற்போது மாவட்ட எல்லைகளை வெறி பிடித்துக்கடக்கும் மதுப்பிரியர்களை தடுத்து நிறுத்த போலீசாரால் முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் எல்லை தாண்டும் மதுப்பிரியர்கள் குடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் மது வகைகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது.
தற்போது அதனைத்தடுப்பதில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
சமீப காலங்களாக போதையின் பாதையில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் பயணப்படும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. எனவே இளைய தலைமுறை மது வலையில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றும் நடவடிக்கைகளை அரசும், தன்னார்வலர்களும் முன்னெடுக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்ல அவசரமானதுமாகும்.