இருதரப்பினர் மோதலில் 3 பேர் படுகாயம்
இருதரப்பினர் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள நொச்சிவயல் பகுதியை சேர்ந்தவர் கூரி. இவரது வீட்டின் வாசலில் தேங்காய் மற்றும் எலுமிச்சை பழம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கூரியின் மகள் விஜி (வயது30) செய்வினை செய்து யாரோ போட்டுவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் யுவராணி, யுவராஜ், முத்துமணி உள்ளிட்டோர் ஆத்திரமடைந்து அரிவாளால் விஜியின் அண்ணன் ரமேஷ் (37) என்பவரை அரிவாளால் வெட்டி விஜி மற்றும் அவருடைய தாய் ஜானகி (65) ஆகியோரை தாக்கி கீழே தள்ளி விட்டார்களாம். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் மற்றும் ஜானகி ஆகியோர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர் இதுகுறித்து விஜி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தகராறில் ரமேஷ் தரப்பினர் அரிவாளால் தாக்கியதில் யுவராஜ் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவருடைய தங்கை யுவராணி அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீசார் ரமேஷ் மற்றும் முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.