கோவில்பட்டி அருகே ஆடுகள் திருடிய முதியவர் கைது
கோவில்பட்டி அருகே ஆடுகள் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் வடக்கு தெருவை சேர்ந்தவர் மருதன் மகன் கார்த்திக் (வயது 26). இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. தனது வீட்டருகே கொட்டகையில் கடந்த 5-ம் தேதி 56 செம்மறி ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது 11 ஆடுகள் திருடு போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் பல இடங்களில் தேடினார். வானரமுட்டி கிராமத்தில் தங்கம் என்பவரின் வீட்டு அருகே அமைக்கப் பட்டுள்ள கொட்டகையில் தன்னுடைய 11 ஆடுகள் இருந்ததை கண்டு பிடித்து யாரிடம் வாங்கினீர்கள்? என்று விசாரித்துள்ளார். அவர் கூசாலிபட்டி மேட்டு தெருவை சேர்ந்த மாடசாமி (வயது 65) என்பவரிடம் அந்த ஆடுகளை வாங்கியதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக கார்த்திக் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய மாடசாமியை கைது செய்தனர்.