வேடசந்தூர் அருகே கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

வேடசந்தூர் அருகே கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை ஒப்படைக்காததால் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-06-16 14:52 GMT
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே தொட்டணம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடந்த ஆட்சியின்போது கடன் தள்ளுபடி செய்த நகைகளை இதுவரை விவசாயிகளிடம் கொடுக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள், பலமுறை வங்கி அதிகாரிகளிடம் கேட்டும் பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று தொட்டணம்பட்டி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். அப்போது, கடன் தள்ளுபடி செய்த நகைகளை திரும்ப கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த வங்கியில் ஏற்கனவே பணியாற்றிய வங்கி செயலாளர் பெரியசாமி, வடமதுரை அருகே உள்ள ஒரு கூட்டுறவு வங்கிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பொறுப்பை ஒப்படைக்காமல் உள்ளதால், தொட்டணம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை திரும்ப கொடுக்க முடியாத நிலை உள்ளது என்றனர். 

மேலும் செய்திகள்