வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.;

Update: 2021-06-16 14:48 GMT
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள சிங்காரக்கோட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 28). இவர், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதேபோல் வடமதுரையை அடுத்த பாறைப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா (21). இவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். 
இவர்கள் 2 பேரும் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவர்களது காதல் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனால் காதலர்கள் 2 பேரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு மணமக்கள் 2 பேரும் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 
இதைத்தொடர்ந்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் மணமக்கள் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்