வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2021-06-16 13:31 GMT
தேனி: 

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குகிறது. 

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடியும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடியும் என 900 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு நேற்று காலை முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. 


152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி, 131.70 அடியாகவும் உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,808 கனஅடியும், அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 



வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்பில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 83 மெகாவாட் மின்உற்பத்தியிலிருந்து தற்போது 126 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்