செங்கல்பட்டு அருகே கொத்தனார் அடித்துக்கொலை
செங்கல்பட்டு அருகே கொத்தனார் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வீராபுரம் ஊராட்சி பரனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் டில்லி. இவரது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரிடம் ராஜேஷ் தவறாக பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவி தனது தந்தை டில்லியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த டில்லி நேற்று கொத்தனார் ராஜேஷை நேரில் அழைத்து பேசியுள்ளார்.
பின்னர் இங்கு பேசவேண்டாம் செங்கல்பட்டு அடுத்த பரணூர் ரெயில் நிலையம் அருகே சென்று பேசலாம் என கூறி அங்கு அழைத்து சென்றார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த டில்லி அங்கு இருந்த இரும்பு கம்பியால் ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பயந்து போன டில்லி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பியோடிய டில்லியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.