வண்ணாரபேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையம் முற்றுகை
வண்ணாரபேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரம்பூர்,
வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் முன்விரோதத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் நாகராஜின் சகோதரர்கள் மற்றும் அங்கிருந்த பெண்களையும் அந்த கும்பல் கற்கள் சரமாரியாக தாக்கி விட்டு சென்றதாக தெரிகிறது..
இதுகுறித்து நாகராஜ் மற்றும் குடும்பத்தினர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்காததாக கூறி வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் நேற்று முன்தினம் இரவு 50-க்கும் மேற்பட்ட காங்கிரசார் நாகராஜை தாக்கியவரை கைது செய்ய கோரி வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன் பின்னர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு காணப்பட்டது.