மா விவசாயிகள் நூதன போராட்டம்

ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு கேட்டு மா விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். அதாவது கோரிக்கை வாசகங்களை கையில் ஏந்தி மாந்தோப்பில் நின்றனர்

Update: 2021-06-16 02:26 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மா விவசாயிகள் தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டும் பனி, வெயில் மற்றும் புதிய வகையான புழுத் தாக்குதல் உள்ளிட்டவையால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மா விவசாயிகளின் கூட்டமைப்பு மற்றும் கே.ஆர்.பி அணை இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடந்தது.

என்.தட்டக்கல் கிராமத்தில் மா தோப்பில் விவசாயிகள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய தட்டிகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் விவசாயிகள் பழனி, சுந்தரவடிவேல், நட்ராஜ், பத்மனி, காளியம்மாள், சுரேஷ், மாணிக்கம், வேலு, சுமன், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சவுந்தராஜன், பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு ஆகியோர் கூறியதாவது:-

இந்த ஆண்டில் மாமரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்திருந்தாலும், கடும் பனிப்பொழிவு, பூச்சி தாக்குதலால் பூக்கள் கருகின. உரிய நேரத்தில் மழை பொழிவு இல்லாததால் பூக்கள் பூத்து மரங்களில் காய் பிடிக்கவில்லை. தண்ணீர் விலைக்கு வாங்கி விளைவிக்கப்பட்ட காய்கள் மட்டுமே சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. அதற்கும் போதிய விலை கிடைக்காமல், சாலையில் கொட்டும் நிலைதான் ஏற்பட்டது.

தொடர் இழப்புகளை சந்தித்து வருவதால் ஒரு சில ஆண்டுகளில் மா சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். எனவே, தமிழக அரசு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் மா விவசாயிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்து ஆய்வுகள் மேற்கொண்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்