திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை
திருமணமான 6 மாதத்தில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கி கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
கல்லாவி
திருமணமான 6 மாதத்தில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கி கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
சிங்காரப்பேட்டை அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுமண தம்பதி
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே நாய்க்கனூர் கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் ராேஜஷ்வரி (வயது 21). இவருக்கும், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்கி (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ராம்கி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் ராஜேஷ்வரி, தனது கணவர் ராம்கியுடன் நாய்க்கனூரில் பெற்றோர் வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம் இரவு தனி அறையில் கணவர் ராம்கியுடன் ராஜேஷ்வரி தூங்கினார்.
தூக்கில் பிணம்
நேற்று காலையில் கண் விழித்த ராம்கி, தன்னுடைய மனைவி அங்குள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். ராம்கியின் சத்தம் கேட்டு ராஜேஷ்வரியின் பெற்றோர் ஓடி வந்தனர்.
தூக்கில் தொங்கிய ராஜேஷ்வரியை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜேஷ்வரி பரிதாபமாக இறந்தார். அப்படி இருந்தும் ஆஸ்பத்திரிக்கு ராஜேஷ்வரியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
உதவி கலெக்டர் விசாரணை
தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இறந்த ராஜேஷ்வரி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.