சேலத்தில் இருப்பு இல்லாததால் கொரோனா தடுப்பூசி போட வந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஏமாற்றம்
சேலத்தில் இருப்பு இல்லாததால் கொரோனா தடுப்பூசி போட வந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சேலம்:
சேலத்தில் இருப்பு இல்லாததால் கொரோனா தடுப்பூசி போட வந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா வைரஸ்
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த மாதம் முதல் நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் தற்போது தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது.
இந்த நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இங்கு ஒரு நாளைக்கு சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இருப்பு இல்லை
இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள், பொதுமக்கள் நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆர்வத்துடன் வந்தனர். அப்போது ஆஸ்பத்திரி முன்புறம் ஒரு பலகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. இதனால் தடுப்பூசி போட வந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி இருப்பு இல்லை. இன்று (நேற்று) மாலைக்குள் தடுப்பூசி வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே தடுப்பூசி வந்த பிறகு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடரும் என்று கூறினர்.