கொரோனா நிவாரண நிதிக்கு 2 பவுன் நகையை கொடுத்த பெண் என்ஜினீயருக்கு பணி நியமன ஆணை- அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் வழங்கினார்
கொரோனா நிவாரண நிதிக்கு 2 பவுன் நகையை கொடுத்த பெண் என்ஜினீயருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.;
மேச்சேரி:
கொரோனா நிவாரண நிதிக்கு 2 பவுன் நகையை கொடுத்த பெண் என்ஜினீயருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
2 பவுன் நகை
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்துக்கு வந்தார். அப்போது, மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகளான என்ஜினீயர் ரா.சவுமியா (வயது 22) என்பவர் முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்தார்.
அதில், ‘என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிவாரண நிதிக்காக எனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை நிதியாக கொடுக்க விரும்புகிறேன். எனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசு வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால்கூட போதும்’ என்று கூறியிருந்தார்.
முதல்-அமைச்சர் உறுதி
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த சவுமியாவின் எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது என்றும், பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் பணி நியமனத்துக்கான ஆணையை பொட்டனேரியிலுள்ள பெண் என்ஜினீயர் சவுமியா வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் சவுமியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மகிழ்ச்சி
பின்னர் என்ஜினீயர் சவுமியா நிருபர்களிடம் கூறும்போது, மிக விரைவாக ஓரிரு நாட்களிலேயே விரைவான நடவடிக்கை எடுத்து எனக்கு பணி நியமன ஆணை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த ஆட்சியிலும் இது போன்ற துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை. முதல்-அமைச்சரின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். உண்மையாக உழைப்பேன் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், முதல்-அமைச்சரை நெகிழ வைத்த சவுமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.17 ஆயிரத்து 500 சம்பளத்தில் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி. மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாச பெருமாள், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பொட்டனேரி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.