ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்த யானை கூட்டம்- போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டமாக உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டமாக உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிகளின் வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் கார், பஸ், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவந்தபடி இருக்கும். வனப்பகுதியை ஒட்டி சாலை செல்வதால் யானைகள் அடிக்கடி ரோட்டை கடக்கும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
யானைகள் உலா
கடந்த சில நாட்களாக புலிகள் காப்பக வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. அதனால் பச்சை பசேல் என புற்கள் முளைத்துள்ளன. இதனால் யானைகள் மேய்ச்சலுக்காக அடிக்கடி ரோட்டு ஓரத்துக்கு வரு கின்றன. இந்த நிலையில் ஆசனூரை அடுத்த அரேபாளையம் பிரிவில் திம்பம் மலைப்பாதை செல்லும் ரோட்டில் நேற்று மதியம் யானைகள் கூட்டமாக உலா வந்தன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சற்று தூரத்திலேயே நின்று கொண்டன. பின்னர் யானைகள் தானாக காட்டுக்குள் சென்றுவிட்டன. இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.