ஊரடங்கை மீறி இயங்கிய 7 ஜவுளிக்கடைகளுக்கு சீல்- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஊரடங்கினை மீறி இயங்கிய 7 ஜவுளிக்கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-06-15 22:09 GMT
ஈரோடு
ஊரடங்கினை மீறி இயங்கிய 7 ஜவுளிக்கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கட்டுப்பாடுகள்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களில் ஈரோடும் ஒன்றாக இருப்பதால் இங்கு கட்டுப்பாடுகள் உள்ளன. மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகளுடன் அத்தியாவசிய தேவைக்கடைகளான மெக்கானிக் கடைகளும் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளன. ஜவுளி உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் ஈரோட்டின் முக்கிய ஜவுளி விற்பனை பகுதியாக உள்ள ஈஸ்வரன்கோவில் வீதி, பிருந்தா வீதி, திருவேங்கடசாமி வீதி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் ஜவுளிக்கடைகளை திறந்து வைத்து இருப்பதாகவும், சில கடைகளில் தொழிலாளர்கள் உள்ளே இருந்து வேலைகள் செய்து வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக ஜவுளி நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே அறையில் உட்கார்ந்து அனுமதி இன்றி வேலை செய்து வருவதாகவும், இதனால் கொரோனா பரவல் அதிகமாகி வருவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளி வந்தன.
7 கடைகளுக்கு சீல்
இதையடுத்து நேற்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவின் பேரில், மாநகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஈஸ்வரன் கோவில் வீதி, பிருந்தா வீதி, வெங்கடாச்சலம் வீதி, திருவேங்கடசாமி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 7 கடைகள் அனுமதி இன்றி திறந்து இருப்பது தெரிந்தது.
உடனடியாக கடையில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி பணியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஊரடங்கின் போது அனுமதி இன்றி செயல்பட்ட 7 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்