பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
விக்கிரமங்கலம் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர் பறித்துச்சென்றார்.
விக்கிரமங்கலம்:
புல்கட்டுடன் நடந்து வந்தார்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள வடக்கு நரியங்குழி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கண்ணு. இவரது மனைவி சவுந்தரம்(வயது 45). விவசாயம் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் சவுந்தரம் தான் வளர்த்துவரும் ஆடு மற்றும் மாடுகளின் தீவனத்திற்கு புல் அறுப்பதற்காக வெண்மான் கொண்டான் பாதையில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார்.
அங்கு ஆடு, மாடுகளுக்கு தேவையான புல்லை அறுத்து கட்டி, புல்கட்டை தனது தலையில் வைத்துக்கொண்டு, தனது வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் யாரும் இல்லாத நிலையில், அந்த வழியாக மொபட்டில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மொபட்டை நிறுத்தி செல்போனில் பேசுவதுபோல் பாவனை செய்து கொண்டிருந்தார்.
5 பவுன் சங்கிலி பறிப்பு
திடீரென அந்த நபர் பின்புறமாக வந்து சவுந்தரத்தின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் நிலைதடுமாறிய சவுந்தரம் கீழே விழுந்தவுடன், தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி, தனது மொபட்டில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சவுந்தரம் அழுதபடி சத்தம் போட்டார். இதையடுத்து அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர் தப்பிச்சென்று விட்டது தெரியவந்தது.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் சவுந்தரம் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.