திருச்சி நகரில் ஒரே நாள் இரவில் 2 கத்திக்குத்து சம்பவங்கள்; மது போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு

திருச்சி நகரில் ஒரே நாள் இரவில் 2 கத்திக்குத்து சம்பவங்கள் நடந்தன. மது போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-15 19:36 GMT
திருச்சி, 
திருச்சி நகரில் ஒரே நாள் இரவில் 2 கத்திக்குத்து சம்பவங்கள் நடந்தன. மது போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கத்திக்குத்து

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி வடக்கு தாராநல்லூர் சூரஞ்சேரி யை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 27). நேற்று இரவு 9.30 மணி அளவில் இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த இரண்டு பேர் அவரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் வந்து நேரடி விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்தம்பியை கத்தியால் குத்தியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இன்னொரு சம்பவம்

இதே போல திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவைச் சேர்ந்த ராம்குமார் என்பவரும் நேற்று இரவு கத்திக்குத்தில் காயம் அடைந்தார். இவரை முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தி விட்டும் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அங்கு கோஷ்டி மோதலாக மாறும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் உடனடியாக வந்து அங்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களும் திருச்சி நகரில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அலறிய மைக்

மேலும் பாலக்கரை, ஸ்ரீரங்கம், உறையூர் போலீஸ் நிலைய பகுதிகளிலும் நேற்று இரவு அடிதடி சம்பவங்கள் நடந்தன. குடிபோதையில் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மாநகர காவல் துறை ‘மைக்' அலறிக்கொண்டே இருந்தது. 

போலீசார் அடிதடி ரகளை தொடர்பாக வந்த தகவல்களை அறிந்து உடனடியாக அங்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

டாஸ்மாக் திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவையொட்டி சுமார் ஒரு மாத காலம் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. மதுக்கடைகள் திறக்கப்பட்ட மறுநாளே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்