மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு
மேல்மலையனூர் அருகே மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கியதில் முறைகேடு செய்த ரேஷன் கடை ஊழியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டார்.
மேல்மலையனூர்,
தமிழகத்தில் நேற்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண 2-வது தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் பணி நடந்தது. அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை முழுமையாக வழங்கப்பட்டது. ஆனால் 14 மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்புக்கு பதிலாக 12 பொருட்கள் மட்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியதாக தெரிகிறது.
அமைச்சர் ஆய்வு
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அந்த ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கு நின்ற பயனாளி ஒருவரிடம் இருந்து மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை வாங்கி சரிபார்த்தார். அப்போது அதில் கடலை ப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ரேஷன் கடை ஊழியர் கர்ணன் என்பவரிடம் விசாரித்தார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் இதுபற்றி கூட்டுறவு துறை இணை பதிவாளர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார்.
பரபரப்பு
அதன்பேரில் அவர் நடத்திய விசாரணையில், ஊழியர் கர்ணன் முறைகேடு செய்தது தெரிந்தது.
இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து, கூட்டுறவு துறை இணை பதிவாளர் பிரபாகரன் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.