கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம், மளிகை பொருட்கள் வழங்கும் பணி கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நிவாரண நிதி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகைப்பொருட்கள் நேற்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக நெல்லை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. 2-வது கட்ட நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் மற்றும் பருப்பு, கோதுமை, சீரகம், கடுகு, சோப்பு அடங்கிய 14 மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் பெறுவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
நெல்லை மாவட்டத்தில் 2-வது கட்ட நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடந்தது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 796 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4 லட்சத்து 63 ஆயிரத்து 439 ரேஷன் கார்டுகளுக்கும், ஒரு குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.92 கோடியே 68 லட்சத்து 78 ஆயிரம் முதல் தவணை தொகை வழங்கப்பட்டது.
ரூ.92 கோடி
கொரோனா 2-வது தவணையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 796 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4 லட்சத்து 63 ஆயிரத்து 439 ரேஷன் கார்டுகளுக்கும் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.92 கோடியே 68 லட்சத்து 78 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் 14 வகையான மளிகைப் பொருட்களும் சுழற்சி முறையில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் அழகிரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி, வட்ட வழங்கல் அலுவலர் நாராயணசாமி, பாளையங்கோட்டை தாசில்தார் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முககவசம் அணிந்து, சமூக விலகலுடன் பொருட்களை வாங்கிச்செல்ல அனுமதிக்கப்பட்டனர். ரேஷன் கடை ஊழியர்களும் முக கவசம், கையுறைகள் அணிந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்கள். சில கடைகளில் நேற்று அதிக கூட்டம் காணப்பட்டது. அந்த பகுதியில் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை ஒழுங்கு படுத்திய பிறகு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.