கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை:ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி-அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-06-15 18:38 GMT
நாமக்கல்:
மளிகை பொருட்கள் தொகுப்பு
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே மே மாதம் முதலே கொரோனா நிவாரணம் முதல் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் சர்க்கரை, உப்பு. கோதுமை மாவு, ரவை, உளுந்தம் பருப்பு, புளி உள்ளிட்ட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
அமைச்சர் மதிவேந்தன்
நாமக்கல் முல்லைநகரில் நடந்த விழாவுக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஸ்குமார், ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு 2-ம் தவணை தொகை மற்றும் மளிகை தொகுப்பு அடங்கிய பையை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி, இந்த பணியை தொடங்கி வைத்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 417 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணை தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் மற்றும் நிவாரண தொகையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.
திருச்செங்கோடு கீழேரிப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கூட்டுறவு துணை பதிவாளர் வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பையை வழங்கினார்.
இதில், தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மேனகா, தேவனாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
சேந்தமங்கலம், பள்ளிபாளையம்
அதனை தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை பொன்னுசாமி எம்.எல்.ஏ. முன்னிலையில், வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேலு, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ஆ.சி. ரவிச்சந்திரன், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் கு.ரவிச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம் ராஜவீதியில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் அடங்கிய பையை வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. அவைத்தலைவர் குளோப்ஜான், வக்கீல் பிரிவு நிர்வாகி மணிவாசகம், மாவட்ட பிரதிநிதிகள் நூல் செல்வம், மாதேஸ்வரன், இளைஞர் அணி நிர்வாகி வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சியை ஒன்றிய செயலாளர் யுவராஜ் தொடங்கி வைத்தார். 
மொளசி
மொளசி ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தங்கவேல் தலைமை தாங்கி, குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணை தொகை, மளிகை பொருட்களை வழங்கினார். 
இதில் மொளசி ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ராஜமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் பிரியா சுரேஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜமாணிக்கம், ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரசேகரன், ஊராட்சி கவுன்சிலர்கள் சரஸ்வதி, அமுதா, கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்