கரூர் சின்னஆண்டாங்கோவிலில் குப்பை கொட்டும் இடமாக மாறிய புறக்காவல் நிலையம்

கரூர் சின்னஆண்டாங்கோவிலில் குப்பைகள் கொட்டும் இடமாக மாறிய புறக்காவல் நிலையத்தை சரிெசய்து அதில் போலீசாரை பணி அமர்த்தி அதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2021-06-15 18:20 GMT
கரூர்
கரூர்
புறக்காவல் நிலையம் 
கரூர் சின்னஆண்டாங்கோவில் பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் திருட்டு மற்றும் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு சின்னஆண்டாங்கோவில் சாைலயோரத்தில் புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டது. 
அதில் போலீசார் பணி அமர்த்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போலீசார் யாரும் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் அந்த புறக்காவல் நிலையம் திறக்கப்படாமல் இருந்தது. நாளடைவில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வீடுகளில் தேங்கும் பழைய துணி, பாய், தலையணை, பஞ்சு உள்ளிட்ட பொருட்களுடன் பிற குப்பைகளையும் அங்கு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த புறகாவல் நிலையம் குப்பை கொட்டி வைக்கும் இடமாக மாறி உள்ளது. 
துர்நாற்றம் வீசும் நிலை
மேலும் புறக்காவல் நிலையத்தை சுற்றிலும் சுவற்றில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு சுகாதார மற்ற நிலையில் உள்ளது. மேலும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அந்த குப்பைகளை மாத கணக்கில் அகற்றாமல் வைத்து உள்ளதால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது காற்று பலமாக வீசுவதால் அப்பகுதியில் கொட்டப்பட்டு இருக்கும் குப்பைகள் அப்பகுதியில் காற்றில் பறந்து செல்கின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்களும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். 
எனவே அங்கு குவிந்து உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து அவ்விடத்தில் மீண்டும் போலீசார் பணி அமர்த்தி புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
தொட்டிகள் வைக்க வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கரூர் பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் வகையில் பெரும்பாலான இடங்களில் போதுமான அளவில் குப்பைகளை சேகரிக்கும் தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளும் உடைந்து காணப்படுவதால் அதில் நாய்கள் மற்றும் கால்நடைகள் குப்பைகளை கிளறுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. மேலும், குப்பையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். குப்பை தொட்டிகள் இல்லாத இடங்களில் சம்பந்தப்பட்ட துறை சார்பில் குப்பைகள் சேகரிக்க, தொட்டிகள் வைக்க வேண்டியது அவசியம் என்றனர்.

மேலும் செய்திகள்