டாஸ்மாக் கடைகள் திறப்பு: ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை எதிர்பார்த்ததைவிட குறைவு
கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது எதிர்பார்ததை விட குறைவு ஆகும்.
கடலூர் முதுநகர்,
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதில் கடந்த 35 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 27 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 147 டாஸ்மாக் சில்லரை மதுபான கடைகளில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்றது.
குறைவாகவே வந்தனர்
35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடப்பதால் பெரிய அளவில் விற்பனை நடைபெறும் என பெருமளவு எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குறைந்த அளவு மதுப்பிரியர்களே கடைகளுக்கு வந்திருந்தனர்.
குறிப்பாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒன்று, இரண்டு மதுப்பிரியர்களே கடைகளுக்கு வந்து சென்றனர். இதற்கு அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பே மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதே காரணமாக பார்க்கப்படுகிறது. இது தவிர மதுபான பாட்டில்கள் விலையும் குவாட்டருக்கு 20 முதல் 30 ரூபாய் வரை விலை உயர்வும் மற்றொரு காரணமாகும்.
விற்பனை குறைவு
இதனால் கடலூர் மாவட்டத்தில் 35 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் முதல்நாள் விற்பனையானது, மிகவும் குறைந்தே காணப்பட்டது.
அதாவது நேற்று ஒரே நாளில் 5 கோடியே 22 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றது. இதுவே முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடை மூடுவதற்கு முந்தைய நாட்களான 8, 9-ந்தேதிகளில் மொத்தம் 28½ கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானது. இதனுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவே ஆகும்.
மேலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு நடக்கும் மதுபான விற்பனை 3 கோடி என்கிற நிலையில் இருக்கும் என்பது குறிப்பிடதக்கதாகும்.