நீலகிரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு ரூ.7 கோடி வருவாய் இழப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு ரூ.7 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு ரூ.7 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஓட்டல்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் படகு இல்லம், தொட்டபெட்டா மலைச் சிகரம், பைக்காரா படகு இல்லம், தமிழ்நாடு ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
கோடை சீசன் உள்பட அனைத்து காலங்களிலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் தமிழ்நாடு ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்து தங்குவார்கள். ஓரிரு நாட்கள் தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது வழக்கம். ஒரு நாள் தங்க ரூ.1,500 முதல் ரூ.3 ஆயிரம் வரை அறைகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதோடு, சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு ஓட்டல் அறைகள் கடந்த 2 மாதங்களாக காலியாக உள்ளது.
படகு இல்லங்கள்
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகு, துடுப்பு படகு, மிதி படகுகள் இயக்கப்பட்டு வந்தது. 2 இருக்கைகள் கொண்ட மிதி படகில் சவாரி செய்ய ரூ.380, 4 இருக்கைகளுக்கு ரூ.580, 10 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.810, 15 இருக்கைகளுக்கு ரூ.1150 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர நுழைவு கட்டணம் ரூ.15 வசூலிக்கப்படுகிறது.
வழக்கமாக கோடை சீசனில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்வார்கள். நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் ஆட்கள் இன்றி வெறிச்சோடியது.
ரூ.7 கோடி இழப்பு
அதேபோல் பைக்காரா படகு இல்லத்தில் 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.815, 10 இருக்கைகளுக்கு ரூ.935, அதிவேக படகில் சவாரி செய்ய ரூ.840 கட்டணம் நிர்ணயம் வசூலிக்கப்படுகிறது. அங்கும் முழு ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் கடந்த 2 மாதங்களாக வரவில்லை.
இதனால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு ரூ.7 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.