உடுமலை ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முறைப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம்
உடுமலை ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முறைப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம்;
உடுமலை
உடுமலை ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முறைப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் எரிசனம்பட்டி, செல்லப்பம்பாளையம், அமராவதி நகர், பெரியவாளவாடி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் போடும் விபரம் தங்களுக்கு தெரிவதில்லை என்றும், இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது என்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முறைபடுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மகளிர் திட்டம் திருப்பூர் உதவி திட்ட அலுவலர் நாகராஜன் தலைமை தாங்கினார். உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இ.எம்.சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எரிசனம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை ஆதார் அட்டையின் 2 நகல்கள், 2 தொலைபேசி எண்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்து வரப்பெறும் தடுப்பூசி எண்ணிக்கை அடிப்படையில், பெயர்பதிவு செய்தவர்களுக்கு சுகாதார துறையில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வரிசைப்படி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
அதன்படி ஆலாம்பாளையம், சின்னக்குமாரபாளையம், எரிசனம்பட்டி, ஜல்லிபட்டி, கொடிங்கியம், பள்ளபாளையம், ராவணாபுரம், புங்கமுத்தூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அந்தியூர், தேவனூர்புதூர், கணபதிபாளையம், ஜிலோபநாயக்கன்பாளையம், பெரியபாப்பனூத்து, பூலாங்கிணர், புங்கமுத்தூர், ராகல்பாவி, ரெட்டிபாளையம், செல்லப்பம்பாளையம், தின்னப்பட்டி, உடுக்கம்பாளையம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் செல்லப்பம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆண்டியகவுண்டனூர், எலையமுத்தூர், குருவப்பநாயக்கனூர், கல்லாபுரம், கண்ணமநாயக்கனூர், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, தும்பலப்பட்டி ஆகிய ஊராட்சிகளைச்சேர்ந்தவர்கள் அமராவதி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், போடிபட்டி, சின்னவீரம்பட்டி, தீபாலபட்டி, கணக்கம்பாளையம், குரல்குட்டை, குறிஞ்சேரி, மொடக்குப்பட்டி, பெரியகோட்டை, பெரியவாளவாடி, ஆர்.வேலூர், வடபூதி நத்தம், ராகல்பாவி ஆகிய ஊராட்சிகளைச்சேர்ந்தவர்கள் பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.