குளத்துக்குள் கும்மாளமிட்ட காட்டு யானைகள்

குளத்துக்குள் கும்மாளமிட்ட காட்டு யானைகள்

Update: 2021-06-15 15:41 GMT
கோவை

வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானைகள் கோவை அருகே உள்ள குளத்துக்குள் இறங்கி குளித்து கும்மாளமிட்டன. அவற்றை வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

காட்டு யானைகள்

கோவையை அடுத்த போளுவாம்பட்டி வனச்சரக பகுதியில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன. இதில் 2 காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து தாணிகண்டி பழங்குடியினர் கிராமம் வழியாக வெளியே வந்தன.  அவை, 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து முட்டத்து வயல் பகுதியில் உள்ள குளம் அருகே வந்தது.

பின்னர் அந்த காட்டு யானைகள் துதிக்கையில் தண்ணீரை உறிஞ்சி தன்மேலேயே ஊற்றி குளித்தன. ஒரு கட்டத்தில் காட்டு யானைகள் குளத்துக்குள் இறங்கி நீண்ட தூரம் சென்று குளித்து கும்மாளம் போட்டன.

3 குழு அமைப்பு

இதை அறிந்த பொதுமக்கள், குளத்தில் யானைகள் குளிப்பதை வேடிக்கை பார்த்தனர். இதற்கிடையே காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்தது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த கோவை, மதுக்கரை பகுதியில் உள்ள வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காட்டு யானைகளை விரட்ட 3 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.


இதைத்தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ், உதவி வன பாதுகாவலர், கால்நடை மருத்துவர்கள் ஆகியோரும் முட்டத்துவயல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது குளத்தில் காட்டுயானைகள் தொடர்ந்து நின்று கொண்டு இருந்தன.

வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

இருப்பினும் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தால் யானைகள் உற்சாகமாக குளித்தபடி நின்றன. 

நீண்டநேர முயற்சிக்கு பின்னர், 2 யானைகளும் குளத்தில் இருந்து மெதுவாக கரைக்கு வந்தன. 

இதையடுத்து வனத்துறையினர் அந்த 2 யானைகளையும், அருகில் உள்ள போளுவாம்பட்டி வனப்பகுதியை நோக்கி விரட்டியடித்தனர். இதனால் காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றன.

மேலும் செய்திகள்