மின்கட்டணம் செலுத்த திரண்ட பொதுமக்கள்
மின்கட்டணம் செலுத்த திரண்ட பொதுமக்கள்
கோவை
நேற்று கடைசி நாள் என்பதால் மின்கட்டணம் செலுத்த பொதுமக்கள் திரண்டனர்.
கொரோனா பரவல்
கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசிய துறைகளை தவிர மற்ற அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. தற்போது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, குறைந்தபட்ச பணியாளர்களுடன் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டது.
மேலும் கொரோனா காரணமாக மின்வாரிய ஊழியர்கள் வழக்கம்போல் வீடு வீடாக சென்று மின் பயன்பாட்டு கணக்கீடு செய்ய இயலாத நிலை இருந்தது.
இதனால் கடந்த 2019- ஆண்டு மே மாத மின் பயன்பாட்டின் அடிப் படையில் 2021 மே மாத கட்டணம் நிர்ணயிக்க மின் வாரியம் உத்தர விட்டு இருந்தது.
இதில் விருப்பம் இல்லாதவர்கள் நடப்பு மாதத்தில் மீட்டர் கணக் கீட்டை செல்போனில் புகைப்படம் எடுத்து மின் இணைப்பு எண்ணு டன் அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது செல்போன் வாட்ஸ்-அப் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
இதற்காக அனைத்து கோட்டங்களுக்கும் வாட்ஸ்-அப் எண்கள் வெளியிடப்பட்டன. மேலும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.
சர்வர் கோளாறு
இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்த நேற்று கடைசி நாள் என்பதால் கோவையில் உள்ள பெரும்பாலான மின் அலுவலகம் முன்பு கட்டணம் செலுத்த பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று மின்கட்டணம் செலுத்தினர்.
மின்கட்டணங்களை ஆன்லைன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும் மின்வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டனர்.
ஆனால் அந்த அலுவலகங்களில் குறைந்த ஊழியர்களே இருந்ததால் அவதிப்பட்டனர். சில இடங்களில் சர்வர் கோளாறு காரணமாக மின்கட்டணம் செலுத்த காத்திருந்த பொது மக்கள், மின்ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கால அவகாசம் வேண்டும்
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வாட்ஸ் அப் வாயிலாக புகைப்படம் எடுத்து அனுப்ப கோரியும், ஆன்லைன் மூலமும் பணப் பரிவர்த்தனை செய்ய மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பலரிடம் ஸ்மார்ட் போன் வசதி இல்லை.
கடந்த 2 மாத மின் கட்ட ணங்களை விட இந்த மாதம் அதிக கட்டணம் வந்ததால் மின்சார அலுவலகத்திற்கு நேரில் வந்தோம். ஊரடங்கு அமலில் இருப்பதால் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து மின்சார வாரிய அதிகாரி கூறுகையில், வழக்கமாக வீட்டில் மின் கணக்கீடு செய்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த மாதம் நேற்று வரை கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
மின்துண்டிப்பு இல்லை
நேற்று கடைசி நாள் என்பதால் மின்கட்டணம் செலுத்த ஏராளமானோர் வந்தனர். அதிக கட்டணம் யாருக்காவது வந்தால் அவர்கள் மட்டும் அலுவலகத்திற்கு நேரில் வரலாம்.
அதை சரி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கேட் பது பற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை மின் துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள படாது என்றனர்.